சென்னை: பிராணிகள் நலன் தொடர்பான முதுகலை டிப்ளமா படிப்பில் பட்டதாரிகள் சேரலாம் என இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் (இக்னோ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இக்னோ பல்கலைக்கழக சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிராணிகள் நலன் தொடர்பான ஓராண்டு கால முதுகலை டிப்ளமா படிப்பை இக்னோ பல்கலைக்கழகம் கடந்த 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. பிராணிகள் நலன், அறவியல், பிராணிகள் நல பிரச்சினைகள், பிராணிகள் தொடர்பான சட்டங்கள், கொள்கைகள், பிராணிகள் நல நடைமுறைகள் போன்ற பாடங்களை உள்ளடக்கிய இப்படிப்பில் பட்டதாரிகள் சேரலாம்.
இந்த படிப்பு, பிராணிகள் நலனில் அக்கறையும் ஆர்வமும் உடையவர்கள், பிராணிகள் நலன் தொடர்பான நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவோர், கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பிராணிகள் நலவாரிய உறுப்பினர்கள், வனத்துறை அலுவலர்கள், வனப் பாதுகாப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு நிலைகளில் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த படிப்புக்கு இந்திய பிராணிகள் நல வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த டிப்ளமா படிப்புக்கான ஜூலை பருவ மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜூன் 30-ம் தேதி ஆகும். மேலும், விவரங்களுக்கு இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 எண்ணில் அலுவுலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம்.