திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தனியார் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு முகாம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. 41 தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 189 வாகனங்களின் பாதுகாப்பு குறித்த இந்த ஆய்வு முகாமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுடன், பள்ளி வாகனங்களின் பிரேக், முகப்பு விளக்கு, அவசரகால வழி, கண்காணிப்பு கேமரா, வேக கட்டுபாட்டு கருவிகள் குறித்து ஆய்வு செய்தார்.
இதில், சில குறைபாடுகள் கண்டறியப்பட்ட 5 வாகனங்களின் தகுதிச் சான்றை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர். அதுமட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி அலுவலர்களுடன் கலந்துரையாடி, உரிய ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், இம்முகாமின் ஒரு பகுதியாக தீயணைப்பு துறை சார்பில் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீத்தடுப்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தீ விபத்தின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறித்து, ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) இள முருகன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.