பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம் முடக்கம்... விஜய் பட வீடியோக்கள் பதிவு; மாணவர்கள் அதிர்ச்சி!


பள்ளிக்கல்விதுறையின் முகநூல் பக்கத்தில் விஜய் வீடியோ

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் விஜயின் மாஸ்டர் படக் காட்சிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முகநூல், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு பக்கங்கள் துவங்கப்பட்டு, அதில் அரசின் நலத் திட்டங்கள், சாதனை மாணவ - மாணவிகளின் பேட்டிகள், நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள், ஆசிரியர்களின் வீடியோ உள்ளிட்டவை நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இன்றைய தலைமுறையினரிடையே சமூகவலைதளங்களை பயன்படுத்தி பள்ளிக்கல்வியை சேர்க்கும் நோக்கத்தில் இவை பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

முகநூல் பக்கத்தில் விஜய் வீடியோ

இந்த நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம், சில மர்மநபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் காட்சிகள், தனித்தனி வீடியோவாக இந்தி மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x