சென்னை: தமிழகம் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்த கூடாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த 2021-22 முதல் 2024-25 வரை உயர்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்புகளின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னையில் உள்ள மாநில உயர்கல்வி மன்றத்தில் நேற்று நடந்தது. உயர்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ், தொழில்நுட்பக் கல்வித் துறை ஆணையர் டி.ஆபிரகாம் மற்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை அறிவிப்புகளின் தற்போதைய நிலை, விரைவுபடுத்த வேண்டிய திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, செப்டம்பர் 23-ம் தேதி வரை மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் பொன்முடி கூறியதாவது: இளநிலை பொறியியல் படிப்புகளில் இந்த ஆண்டு 15,000 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ஒரே அளவில் உள்ளது. மாணவர் சேர்க்கை, கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்களை தமிழ்ப் புதல்வன் திட்டம் வெகுவாக கவர்ந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் விசாரணை குழு அமைத்துள்ளோம். அண்ணா பல்கலைக்கழகத்திடமும் அறிக்கை கேட்டுள்ளோம். அவற்றின் அறிக்கைகள் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் கடந்த 1967-ம் ஆண்டு முதல் இருமொழி கொள்கை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் இந்தி மொழி பாடத்தை 3 பேரும், மலையாளத்தை 4 பேரும் மட்டுமே படிக்கின்றனர். உருது படிப்பில் யாருமே சேரவில்லை. எனவே, இத்தகைய பாடங்கள் தேவை இல்லை. தமிழக மாணவர்கள் இருமொழி கொள்கையைதான் விரும்புகின்றனர். மும்மொழி கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை என்பதற்காக, நிதியை மத்திய அரசு நிறுத்துவதை ஏற்க முடியாது. பள்ளிக்கல்வியில் இருந்து உயர்கல்வி வரை தலைசிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, மத்திய அரசு கல்விக்கான நிதியை நிறுத்தாமல் வழங்கி, தமிழகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்