தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 43 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் இருந்து 1,589 மாணவர்கள் நேரடியாகவும், 293 மாணவர்கள் தபால் மூலமாகவும் இணைப்பு கல்லூரிகளில் இருந்து 1.838 மாணவர்கள் என மொத்தம் 3,720 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.
இன்றைய நிகழ்ச்சியில் பி.எச்.டி, பி.ஜி மற்றும் யுஜி மாணவர்கள் 57 பேர் மற்றும் 489 பேர் முனைவர் பட்டங்களை நேரடியாக ஆளுநரிடம் பெற்றனர். மேலும் இதில் சாய்லா அஞ்சும் என்ற மாணவி தங்கப்பதக்கமும், 58 பேர் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் உழவர் நலத்துறை மத்திய அரசு செயலாளர் மனோஜ் அகுஜா விழா சிறப்புரையாற்றினார். அப்போது அரசு வழங்கும் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, வேளாண்மையின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். முன்னதாக பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தொடக்க உரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றவில்லை.
அதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...