அனைவரது கருத்தையும் உள்வாங்கி தெளிவான முடிவை எடுப்பவர் கருணாநிதி! -அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேச்சு


மாணவர்களுக்கு பரிசு வழங்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

“எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் அனைவரது கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு தெளிவான முடிவை எடுப்பவர் கருணாநிதி” என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா ராஜா முத்தையா மன்ற அரங்கத்தில் இன்று நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

‘‘கல்லூரி கல்வியை காணாத மாணவர்களிடம் இதுபோன்ற சுயமான பேச்சுத் திறமைக்கு காரணம், அவர்தம் மொழிப்பற்று ஆகும். மனிதத் திறனில் இருப்பதிலேயே சிறந்த அம்சம் தொடர்புத்திறன் ஆகும். எழுதுவது, பேசுவது, கருத்துக்களை பரிமாறிக்கொள்வது ஆகியவை அதில் உள்ளடக்கம். அதில் பொது கூட்டங்களில் பலர் முன்னிலையில் பேசுவது என்பது பலருக்கு கடினமான ஒன்றாக இருக்கும். சிலருக்கு அது சிறப்பான ஒன்றாக இருக்கும்.

அதில் முதன்மையானவர் கருணாநிதி. அதனால்தான் எல்லோரும் கூறுவதுபோல தமிழையும் கருணாநிதியையும், தமிழர்களையும் கருணாநிதியையும், தமிழ்நாட்டையும் கருணாநிதியையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. எந்த அளவிற்கு பேசுவது, எழுதுவதில் திறமையோ அதே அளவிற்கு கேட்டுக்கொள்வது, தகவலை உள்வாங்கிக்கொள்வது, அடுத்தவர்களிடம் தகவல் கண்டறிவதும் மிகப்பெரிய திறமை ஆகும்.

பொறுப்புகள் கூடுகிறபோது வந்தடைகிற உண்மைத் தகவல்கள் குறைவாகிவிடும். இது அரசியல் உள்ளிட்ட அத்தனை துறைகளுக்கும் பொருந்தும். ஆனால் கருணாநிதியோ எந்த ஒரு நிகழ்வை பற்றி, எந்த கருத்தை கேட்பார் என எவருக்கும் தெரியாது. அதிகாலை மூன்று மணி, நான்கு மணிக்கெல்லாம் துறை செயலாளரிடம் பேசுவார். பத்திரிக்கையாளர்களிடம் பேசுவார்.

கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள்

இப்படி கடைக்கோடி வரை உண்மையில் என்ன நடக்கிறது என்பதை, அவரது உயர்ந்த இடத்தில் இருந்தே தகவல்களை பெற்று விடுவார். இந்த திறமை கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும். அதேபோல் கூட்டம் நடத்தும்போதுகூட கூட்டத்தில் உள்ள அனைத்து நபர்களின் கருத்தையும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் உள்வாங்கிக்கொண்டு, அதன் பிறகு தெளிவான முடிவை எடுப்பார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் கல்வித் திட்டம் சிறப்பாக இருந்தாலும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கிறது. அதே நேரத்தில் பல நிறுவனங்கள் அரசாங்கத்திடம், எங்களுக்கு தேவையான திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பது கடினமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதற்கு கல்வித் திட்டத்திற்கும் வேலைவாய்ப்பிற்கும் உள்ள தொடர்பு இடைவெளிதான் காரணம்.

அதை திருத்துவதற்காகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை சிறப்பு திட்டமாக ஓராண்டுக்கு முன்பு தலைவர் கருணாநிதி நினைவு நாளன்று தொடங்கி வைத்தார்" என்று பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

x