பொதுத்தேர்வு எழுத வராத மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது... அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

இந்த ஆண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மூலம், பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அருகே கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று வருகை தந்தார். நெல் கொள்முதல் நிலையத்தை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

புதிய நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்

அவர் பேசும் போது, “இந்த ஆண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், நிகழாண்டு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஒரு பள்ளிக்கு 1 அல்லது 2 மாணவர்கள்தான் பங்கேற்கவில்லை என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு உயர் அலுவலர்களும் முயற்சி எடுத்தனர். கெரோனா காலத்தில் பள்ளிக்கு குழந்தைகள் வராத நிலையிலும், அதன் பிறகும் கல்வியில் நாட்டம் செலுத்தாத குழந்தைகளுக்கும் சேர்த்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. கல்வி முறையிலிருந்து குழந்தைகள் வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்றார்.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

மேலும், “கடந்த ஆண்டு பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களையும், தேர்வுக்கு முந்தைய ஒரு மாத காலத்தில் தயார்படுத்தினோம். அதையும் புரிந்து கொண்டு சில மாணவர்கள் எழுதினர். சில மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. அந்த நிலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது. நிகழாண்டு முயற்சி எடுத்து கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளோம். வருங்காலத்தில் தமிழக முதல்வரின் திட்டங்களைக் கூறி பள்ளிக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1ம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அங்கன்வாடிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3.30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடிகளிலிருந்து அரசு பள்ளிகளில் முழுமையாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் என வரக்கூடிய வதந்திகள் உண்மையாகிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

x