தென்காசியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி


ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் | கோப்புப் படம்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்புகளுக்கு வழிகாட்டும் நான் முதல்வன்- உயர்வுக்குப் படி - 2024 நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரண்டு மண்டலங்களில் நடைபெறும். இதில் தென்காசி மண்டலத்தில் வருகிற 11, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தென்காசி இசக்கி மஹாலிலும், சங்கரன்கோவில் மண்டலத்தில் வருகிற 13, 24 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சங்கரன்கோவில் ஏ.வி.ஆர்.எம் மண்டபத்திலும் வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் 2022 - 2023 மற்றும் 2023 - 2024 ஆகிய கல்வியாண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத, தேர்வுக்கு வராத மற்றும் தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிப்புகளில் சேராத மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

மாணவர்களுக்கு பல்துறை நிபுணர்கள் மூலம் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து பயில உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். பாலி டெக்னிக், ஐ,டி,ஐ போன்றவற்றில் சேரவும், விடுதிகளில் தங்கி பயில்வதற்கும், தொழில்நுட்ப பயிற்சிகளில் சேரவும், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட கல்வி உதவித் தொகைகள் கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

தேவைப்படும் மாணவர்களுக்கு குடும்ப ஆலோசனைகளும் வழங்கப்படும். முன்னோடி வங்கிகளின் துணையுடன் சம்மந்தப்பட்ட மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிப்பை தொடர தேவையான கடனுதவிகள் செய்து தரப்படும்.

தென்காசி மண்டலத்தில் நடைபெறும் நான் முதல்வன்- உயர்வுக்குப் படி - 2024 வழிகாட்டி நிகழ்ச்சியில் கடையம், தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, கீழப்பாவூர் மற்றும் ஆலங்குளம் ஆகிய ஆறு வட்டாரங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துகொள்ளலாம்.

சங்கரன்கோவில் மண்டலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், மேலநீலித நல்லூர் மற்றும் குருவி குளம் ஆகிய நான்கு வட்டாரங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொள்ளலாம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறையும் ,தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகமும் செய்துள்ளன என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் கூறியுள்ளார்.

x