அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழத்தின் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை உயர்த்த நிர்வாகம் ஆலோசித்து வந்தது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட பல்கலைக்கழக சிண்டிகேட் குழுக் கூட்டத்தில், 50 சதவீத கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது, யுஜி பிராக்டிகல் மற்றும் தியரி தேர்வு என ஒவ்வொரு தாளுக்கும் தலா 150 ரூபாயாக இருந்த தேர்வுக் கட்டணம், 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. யுஜி ப்ரொஜெக்ட் தீசிஸ்-க்கு தேர்வுக் கட்டணம் 300 ரூபாயாக இருந்தது. தற்போது அது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல பிஜி பிராக்டிகல் மற்றும் தியரி தேர்வு, இன்டர்னல் தேர்வு, மினி ப்ரொஜெக்ட், கோடைக்கால ப்ரொஜெக்ட் ஆகிய அனைத்துக்கும் தாள் ஒன்றுக்கு முன்பு தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்தது. அது தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பிஜி ப்ரொஜெக்ட் வேலைக்கு, ஒவ்வொரு கட்டத்துக்கு 600 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வுக் கட்டணத்துடன் சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, யுஜி மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றைப் பெற முன்பு 1,000 ரூபாய் கட்டணமாக இருந்தது. இந்தக் கட்டணம் 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிஜி படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், டிகிரி சான்றிதழ் கட்டணமும் 1000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவை தவிர்த்து தன்னாட்சி அதிகாரம் பெறாத கல்லூரிகளின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், டிகிரி சான்றிதழ் ஆகியவற்றை டிஜி லாக்கர் செயலியில் பதிவேற்றம் செய்யும் ஆன்லைன் சேவைக்கு புதிதாக ரூ.1,500 கட்டணம் செலுத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ள மாணவர்கள், இதனை திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.