நாளை தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு... 4,200 பறக்கும் படை அமைப்பு!


தேர்வு எழுதும் மாணவர்கள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 1) தொடங்குகிறது.

தேர்வு எழுதும் மாணவர்கள்

தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் எஸ்எஸ்எல்சி. மாணவ-மாணவிகளுக்கு அடுத்தடுத்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் முதலில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 47 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர்,வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

அரசுத் தேர்வுகள் இயக்ககம்

இதுதவிர தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க 4,200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதனம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளைப் பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு வருகிற 4-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்எஸ்எல்சி மாணவ, மாணவிகளுக்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

x