‘மோசமான வேலைவாய்ப்பு சீஸன்’ பொறியியல் கல்லூரிகளுக்கான கேம்பஸ் இன்டர்வியூ தேர்வில் ஏமாற்றம்


கேம்பஸ் இன்டர்வியூ

தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கான மென்பொருள் நிறுவனங்களின் கேம்பஸ் இன்டர்வியூ ஆளெடுப்புகள், வருடாந்திர பணியமர்த்தலின் மோசமான சீசனை சுட்டிக்காட்டுகின்றன்.

அண்மைக்காலமாக மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியிழப்புக்கு ஆளாகி வருகின்றனர். ஐடி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்ததில் மனித பணியாளர்களின் தேவையை அவை பெருமளவு ஈடு செய்யத் தொடங்கின. கொரோனா காலத்தில் மிகக்குறைவான பணியாளர்களுடன் சவாலான அலுவலகச் சூழலை எதிர்கொண்ட மென்பொருள் நிறுவனங்கள், அதே போக்கை கொரோனாவுக்குப் பின்னரும் தொடர விழைகின்றன. இவற்றின் மத்தியில் புதிதாக ஆளெடுப்பது நடப்பு சீஸனில் குறைவாகவே இருக்கும் என்ற கணிப்புகள் வெளியாகி வந்தன.

டிசிஎஸ்

தற்போது தொடங்கியிருக்கும் வளாக நேர்காணல்களும் அதனை உறுதி செய்துள்ளன. டிசிஎஸ், அக்சென்ச்சர் ஆகிய முன்னணி மென்பொருள் நிறுவனங்கள் தமிழகத்தின் முன்னணி பொறியியல் கல்லூரிகளான விஐடி மற்றும் எஸ்ஆர்எம் ஆகிய கல்விக் குழுமங்களில் அண்மையில் வளாக நேர்காணல்களை மேற்கொண்டன. இதில் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், 9000 பேர் அடங்கிய மாணவர்களில் இருந்து சுமார் 900 பேர்களை டிசிஎஸ் தேர்வு செய்துள்ளது. இதுவே எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் 410 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்தாண்டு வளாக தேர்வில், டிசிஎஸ் நிறுவனம் விஐடி-இல் இருந்து 3500 பேரையும், 2000 சொச்சம் பொறியியல் பட்டதாரிகளை எஸ்ஆர்எம்ஐடி கல்லூரியில் இருந்தும் தேர்வு செய்திருந்தது. தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களான இவற்றிலிருந்து, நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விட குறைவான பட்டதாரிகளையே தேர்வு செய்திருப்பதாக வளாக நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அக்சென்ச்சர்

மும்பை பின்னணியிலான அக்சென்ச்சர் நிறுவனமும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே ஆளெடுப்பினை மேற்கொண்டது. இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ9 லட்சம் என்ற முதன்மை பிரிவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான பட்டதாரிகளையும், ஆண்டுக்கு ரூ3 முதல் ரூ4 லட்சம் என்றளவிலான ஊதியங்களில் அதிக எண்ணிக்கையிலும் ஆட்களை அமர்த்தியுள்ளன. இவையும் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏமாற்றம் அளித்துள்ளன. இந்த முன்னணி நிறுவனங்களுக்கு அடுத்தபடியாகவே, இதர கல்லூரிகள் கேம்பஸ் இன்டர்வியூ பரிசீலனைகள் தொடர இருக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

x