இந்தியா முழுவதும் 6 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச்செயலாளர் அர்ச்சனா சர்மா அவஸ்தி கூறியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கை - 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற மாநிலங்களில் இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி, அங்கன்வாடி முதல் 2-ம் வகுப்பு வரை (3-8 வயது) 5 ஆண்டுகள், 3 முதல் 5-ம் வகுப்பு வரை (8-11 வயது) 3 ஆண்டுகள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை (11-14 வயது) 3 ஆண்டுகள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை (14-18 வயது) 4 ஆண்டுகள் என 4 நிலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை 6 வயதில் தொடங்கினால்தான், அடுத்தடுத்த படிநிலைகள் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில், அனைத்து பள்ளிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம் போல, டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் 5 வயதில்தான் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கர்நாடகா, கோவாவில் 5 வயது 10 மாதங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் தற்போது 6 வயதில்தான் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்த நிலையில், 6 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே 1-ம் வகுப்பில் சேர வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சகத்தின் இணைச்செயலாளர் அர்ச்சனா சர்மா அவஸ்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்," இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 6 வயதுக்கு மேல் (6+ years) உள்ள மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், 2024- 25-ம் கல்வி ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளது. உங்களின் மாநிலத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் தெரிவிக்க வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எனினும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. குறிப்பாக முன்னணி தனியார் பள்ளிகளில் டிசம்பர் மாதத்திலேயே சேர்க்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக 5 வயது நிறைவடைந்த குழந்தைகள் 1-ம் வகுப்பிலும் 3 வயது முடிந்த குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும் சேர்க்கப்படுவர்.
சிபிஎஸ்இ வகுப்புகளுக்கு தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் வயது வரம்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் மாநிலக் கல்வி வாரியத்தில் 5-ம் வகுப்பே வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!
திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!
ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!
அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!