டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! 


சென்னை: டிஎன்பிஎஸ்சி 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 1,59,887 பேர் எழுதினர்.

வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவிஇயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்அலுவலர் ஆகிய உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 90 பணியிடங்களுக்கு ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற முதல்நிலைத் தேர்வை 1,59,887 பேர் எழுதினர். அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். குரூப் 1 முதன்மைத் தேர்வு டிச. 10 முதல் டிச. 13 வரை நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/document/Certificateverification/04_2024_GR_I_PRLM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம்.

மெயின் தேர்வு: முதல்நிலைத் தேர்வு மூலம் ஒரு காலியிடத்துக்கு 20 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு 1800 பேர் அனுமதிக்கப்படுவர். இந்த தேர்வு விரிவாக விடை எழுதுவும் வகையில் அமைந்திருக்கும்.

இதில் பொது அறிவு தொடர்பான 3 தாள்களும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாளும் இடம்பெற்றிருக்கும். தமிழ் மொழி தாளில் தேர்ச்சி பெற்றாலே போதும். பொது அறிவு தாள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இறுதியாக மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.

குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில்சேருவோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதேபோல் டிஎஸ்பி ஆக பணியில் சேர்வோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம். அவர்களுக்கு தமிழ்நாடு கேடர் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட இதர பணி அதிகாரிகள் வருவாய் அல்லாத பிரிவின் கீழ் ஐஏஎஸ் அதிகாரியாக ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

x