சிபிஎஸ்இ தேர்வில் வருகிறது சூப்பர் மாற்றம்... பிட் அடிக்க வேண்டாம்; புத்தகத்தைப் பார்த்தே எழுதலாம்!


கோப்புப்படம்

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், புத்தகங்கள், கையேடுகளை பார்த்து தேர்வு எழுதும் முறையை கொண்டுவர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சோதனை முறையில் இந்த முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வின்போது கேள்வித்தாள்கள் கொடுக்கப்பட்டு பதில் எழுதும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையின் மூலம் மனப்பாடம் செய்து, அதை அப்படியே ஒப்புவிக்கும் முறையே உள்ளதாகவும், மாணவர்கள் சிந்தித்துத் தேர்வு எழுதுவது இல்லை என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இந்தத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுதல்

முதற்கட்டமாக, 9-ம் முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள், புத்தகங்கள், கையேடுகளை பார்த்தே தேர்வு எழுதும் வகையில் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம், மனப்பாடம் செய்து அப்படியே எழுதும் நடைமுறைக்கு மாற்றாக சிந்தித்து விடை எழுதும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நினைவாற்றலை பரிசோதிப்பதற்கு பதிலாக பாடத்தை எந்த அளவுக்கு புரிந்துள்ளனர் என்பதை இந்த புதிய முறை தேர்வு மூலம் மதிப்பீடு செய்ய முடியும். புத்தகங்களை பார்த்து எழுத அனுமதிப்பதன் மூலம் மாணவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும் என்று சிபிஎஸ்இ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

cbse

இந்த புதிய முறைப்படி வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளில் மட்டும் சோதனை முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. அந்தத் தேர்வின்போது பாடப்புத்தகங்கள், கையேடுகள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லலாம் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், அறிவியல், கணிதம் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், உயிரியல், கணிதம் பாடங்களுக்கும் இந்த முறையில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மற்றும் வரவேற்பை பொறுத்து நாடு முழுவதும் இந்தத் தேர்வு முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்கும் எனவும் சவால் மிகுந்ததாக இருக்கும் எனவும் கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

x