குமரி - கேரள எல்லையில் உள்ள அரசுப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு!


குமரி மாவட்டம் கிள்ளியூர் அரசு நடுநிலை பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி குழந்தைகளிடம் நன்னெறி கதைகளை கேட்டார்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,"அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியருக்காக அர்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, எண்ணும் எழுத்து வகுப்பறை, பயன்பாடில்லாத கட்டிடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பழுதடைந்த கட்டிடங்களை சீர் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு உட்கொள்ளும் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளை பாராட்டியதுடன் ஆசிரியர்களின் கோரிக்கைகளும் கேட்டறியப்பட்டது.

மேலும், அப்பள்ளியில் நடைபெற்ற நன்னெறி வகுப்பில் மாணவர்களோடு அமர்ந்து மாணவர்கள் சொல்லிய நன்னெறி கதைகள் கேட்கப்பட்டது. குமரி - கேரள எல்லை பகுதியில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இப்பள்ளியில் மொழி சிறுபான்மையினர் அதிகம் வசிப்பதால் மலையாள வழிக்கல்வி முறையிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.

மலையாள வகுப்பறையில் அமர்ந்து நன்னெறி கதைகள் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை குழந்தைகளிடம் கேட்டு கலந்துரையாடினேன். அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, ஆசிரியர்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது” என்று அமைச்சர் மகேஸ் கூறினார்.

x