திண்டுக்கல்: "திண்டுக்கல் மாவட்டத்தில் கல்விக் கடன் திட்டம் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் அதிகம் பேர் உயர்கல்வி படிக்க வாய்ப்பு அமையும்" என திண்டுக்கல் எம்பி-யான ஆர்.சச்சிதானந்தம் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கல்விக் கடன் திருவிழா திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல் தலைமை வகித்தார். முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம் வரவேற்றார். கனரா வங்கி துணை பொதுமேலாளர் பாலானி ரங்கநாதன், பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் திவ்யா தேஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கி திண்டுக்கல் எம்பி-யான, ஆர்.சச்சிதானந்தம் பேசுகையில், "பொருளாதார வசதி இல்லாததால் ஒரு மாணவன் கல்வியை இழந்துவிடக் கூடாது என்பதற்காக கொண்டு வந்த திட்டம் தான் இந்த கல்விக்கடன் திட்டம். இதை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக கல்விக்கடன் வழங்கிய மாவட்டமாக மதுரை மாவட்டம் உள்ளது.
இந்த ஆண்டு கல்விக்கடன் வழங்குவதில் மதுரையை மிஞ்சிய மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் மாற வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்விக்கடன் பெறும் வகையில் இத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகம் பேர் உயர்கல்வி படிக்க வாய்ப்பு ஏற்படும். 33 வங்கிகளில் கனரா வங்கியில் 162 பேருக்கும், ஸ்டேட் வங்கியில் 130 பேருக்கும் அதிகபட்சமாக கல்விக் கடன் வழங்கியுள்ளனர்.
கல்விக்கடன் வழங்கும் விழா போல் வேலைவாய்ப்பு முகாம்களையும் நாம் நடத்த வேண்டும். அப்போது தான் கல்விக்கடன் வாங்கியவர்கள் கடனை செலுத்த ஏதுவாக இருக்கும். எல்லா கல்வி நிலையங்களுக்கும் சென்று கல்விக் கடன் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்" எம்பி சச்சிதானந்தம் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி முதல்வர் வாசுதேவன் மற்றும் வங்கி அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.