இங்கிலாந்தில் பள்ளிகள் அனைத்திலும் செல்போன்களுக்கு தடை விதித்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகிறது.
பள்ளிப் பருவத்து மாணவர்களின் கல்விக்கு செல்போன் எவ்வாறு ஊறு விளைக்கிறது என்பது சொல்லித் தெரிவதல்ல. ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசாங்கம் என பலதரப்பிலும், சிறார் கையிலிருக்கும் செல்போன்கள் பெரும் சவாலாக மாறி வருகின்றன. அதிக நேரம் ஸ்மார்ட்போன் திரைகளை பார்ப்பது பார்வைத்திறன், மூளை வளர்ச்சி, மனப்பாங்கு உள்ளிட்டவற்றை நேரிடையாக பாதிக்கின்றன.
இவற்றுக்கு அப்பால் செல்போனில் கிடைக்கும் கட்டற்ற இணையம் அவர்களை தவறாக வழி நடத்தவும் காரணமாகிறது. சூது, பாலியல், போதை, வன்முறை என புதைகுழிகளில் சிக்கவும் வாய்ப்பாகிறது. இவற்றைத் தடுக்க வீடுகளில் பெற்றோர் மேற்பார்வையில் சிறாரின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தலாம். ஆனால் வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் இன்னொரு விரலாக சேர்ந்திருக்கும் செல்போனை முடக்க அரசாங்கமே தலையிட வேண்டியதாகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், கலாச்சார பின்னணியிலான குலையாத குடும்ப அமைப்பு காரணமாக, பிள்ளைகளின் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது ஒப்பீட்டளவில் எளிதாகிறது. பெரும்பாலான பள்ளிகளில் செல்போன் பயன்பாடு என்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் வளர்ந்த நாடுகளில் செல்போனை தவிர்க்க இயலாத பாதுகாப்பு அம்சமாகவும், தகவல் தொடர்புக்கான அத்தியாவசிய சாத்தியமாகவும் பார்க்கிறார்கள். எனவே அத்தனை எளிதாக பள்ளிகளில் செல்போனை தடை செய்வது இயலாமல் போனது.
சிறார் மீதான அதிகரிக்கும் செல்போன் வாயிலான பாதிப்புகளை அடுத்து, ஐரோப்பிய நாடுகள் வரிசையில் இங்கிலாந்தும் தற்போது பள்ளிகளில் செல்போனுக்கு தடை விதித்திருக்கிறது. இதனை சுவாரசியமான வீடியோ ஒன்றின் வாயிலாக பிரதமர் ரிஷி சுனக்கே, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ’மூன்றில் ஒரு மாணவரின் பள்ளிக்கல்வி செல்போனால் சீரழிவதாக’ ஆய்வு தரவினை மேற்கோள் காட்டும் ரிஷி சுனக், செல்போனின் தொந்தரவினை ஒரு தேர்ந்த நாடக நடிகரின் தோரணையோடு விளக்கியதில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!
மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!
சென்னையில் மமக நிர்வாகி மீது தாக்குதல்...திமுக செயலாளர் மீது வழக்கு!
ஜெயலலிதாவின் 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளிப் பொருட்கள் தமிழகம் வருகிறது!
அந்த வீடியோவை காண்பித்து நோயாளிக்கு அறுவை சிகிச்சை... ஆந்திராவில் நடந்த சுவாரஸ்யம்!