வெளியானது ஆசியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல்; இந்தியாவின் டாப் 10 எவை தெரியுமா?


ஐஐடி பாம்பே

2024-ம் ஆண்டின் ஆசிய கண்டம் அளவிலான தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள் குறித்தான எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்துவதில் உலகளவில் பிரபலமான Quacquarelli Symonds சார்பில், 2024ம் ஆண்டுக்கான ஆசிய அளவிலான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 வரிசையில் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவுமே இல்லை. எனினும் இடம்பிடித்தவற்றில் இந்தியாவின் டாப் 10 கல்வி நிறுவனங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

ஐஐடி டெல்லி

இந்த பட்டியலில் ஐஐடி பாம்பே 40வது இடம் பிடித்துள்ளது. 46வது இடத்தில் ஐஐடி டெல்லி வருகிறது. இந்த வகையில் ஆசியாவின் டாப் 10 பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பிடிக்காதபோதும், டாப் 50 பட்டியலில் பாம்பே மற்றும் டெல்லி ஐஐடிகள் இடம் பிடித்துள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் ஐஐடி மெட்ராஸ், இந்திய அறிவியல் நிறுவனமான ஐஐஎஸ்சி, ஐஐடி காரக்பூர், ஐஐடி கான்பூர், டெல்லி பல்கலைக்கழகம், ஐஐடி குவஹாத்தி. ஐஐடி ரூர்க்கி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.

இதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் என ஐஐடிகள் மற்றுமொரு முறை தங்களை நிரூபித்துள்ளன. அதே போன்று ஆசிய அளவிலான தலைசிறந்த கல்வி நிறுவங்களில், அதிகமானவற்றை பட்டியலில் இடம்பிடிக்கச் செய்த வகையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் 148 பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. அடுத்தபடியாகா சீனா(133), ஜப்பான்(96) ஆகியவை வருகின்றன.

ஐஐடி மெட்ராஸ்

25 நாடுகளின் 856 உயர்கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்த தரவரிசைப் பட்டியலில் சீனாவின் பெகிங் பல்கலைக்கழகம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆசியாவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஹாங்காங் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

இதையும் வாசிக்கலாமே...

x