பி.எட் 2-ம் ஆண்டு வினாத்தாள் ‘லீக்’ - ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கம்


கோப்புப் படம்

சென்னை: பி.எட் 2-ம் ஆண்டு வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில் ஆன்லைனில் புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையே, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 700-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்வியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. பிஎட், எம்.எட்படிப்புகளுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகளை இப்பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பி.எட், எம்.எட்(பொது மற்றும் சிறப்பு கல்வி)படிப்புகளில் முதல் ஆண்டு மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகள் கடந்த 27-ம் தேதிதொடங்கி நடைபெற்று வருகின்றன. 3-வது நாளான நேற்று பி.எட் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ‘கிரியேட்டிங் அன் இன்குளூசிவ் ஸ்கூல்’ என்ற பாடத்துக்கான (செமஸ்டர் முறை) தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூகவலைதளங்களில் வெளியானது. இது உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை நடைபெற இருந்த புதிய வினாத்தாள் ஆன்லைன் வாயிலாக தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது.

பதிவாளர் நீக்கம்: பி.எட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான நிலையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றிவந்த என்.ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தின் கல்வி திட்டம் மற்றும் நிர்வாகத்துறையின் தலைவரான பேரராசிரியர் கே.ராஜசேகரன் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுநேற்று முன்தினம் (ஆக.28) பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தஉத்தரவில் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் 23-ம் தேதியே அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘பி.எட்தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழக ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

x