அவதூறாக பேசிய கல்லூரி முதல்வர்: மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!


மாணவர்கள் போராட்டம்

சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இன்று காலை திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்கள் போராட்டம்

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி அரசியல், அறிவியல் தொடர்பான நிகழ்ச்சி கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள் விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர். அப்போது மேடையில் பேசிய மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன், மாணவர்கள் ஓசி பிரியாணிக்காக செல்வதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அரசியல் அறிவியல் பேராசிரியர், கல்லூரி முதல்வரிடம் கேட்டார். அப்போது, மாணவர்கள் முன்னிலையில் பேராசிரியர் முத்துக்குமாரையும் முதல்வர் ராமன் தகாத வார்த்தையால் பேசி கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் மாணவர்கள், கல்லூரி முதல்வரிடம் சென்று இதுகுறித்து கேட்டதற்கு, " நான் அப்படித்தான் செய்வேன், உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் கல்லூரி முதல்வரை கண்டித்து இன்று காலை முதல் மாணவர்கள் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், கடந்த இரண்டு வருடங்களாக திமுக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் , அரசியல் கூட்டங்கள் மற்றும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் காண்பிப்பதற்காக மாணவர்களை பேருந்து மூலமாக வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டினர்.

இதற்கு கல்லூரி முதல்வர் உடந்தையாக செயல்படுவதாகவும் மேலும் மாணவர்கள் தங்கும் விடுதியில் முறையான உணவுகள் வழங்கப்படவில்லை என்றும், அடிப்படை வசதிகள் முறையாக செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் கல்லூரி விடுதியின் கேன்டீனை திமுக செயலாளருக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்து முதல்வர் பணம் பெற்றதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கல்லூரி இயக்குநர் அலுவலகம், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

x