தூத்துக்குடி: சேவை குறைபாடு காரணமாக மாணவிக்கு ரூ.1.28 லட்சம் வழங்க தனியார் பள்ளிக்கு தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் இன்று உத்தரவிட்டது.
தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவர் தனது மகளை திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே உள்ள திருவிருத்தான்புளி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்த்துள்ளார். இதற்காக ரூ.93,500 கட்டணமாக செலுத்தி உள்ளார். இப்பள்ளியில் தங்கும் விடுதி சரியாக இல்லாததாலும், அளிக்கப்பட்ட உணவு தரமாக இல்லாததாலும், போதிய ஆசிரியைகள் இல்லாததாலும், தனது மகளை அப்பள்ளியில் இருந்து, சங்கரன்கோவிலில் உள்ள வேறு பள்ளியில் சேர்த்துள்ளார்.
இந்த மாணவி, முதலில் படித்த பள்ளிக்கு மொத்தம் 12 நாட்கள் மட்டுமே சென்றுள்ளார். இதையடுத்து, அந்த பள்ளியில், 12 நாட்கள் படித்ததற்குரிய தொகையை எடுத்து விட்டு மீதி தொகையை தருமாறு பொன்னுசாமி விண்ணப்பித்துள்ளார். அதற்கு அந்த பள்ளி நிர்வாகம் மரியாதையின்றி பேசி திருப்பி அனுப்பி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவர், இதுகுறித்து சேரன்மகாதேவி சார் ஆட்சியர், பத்தமடை காவல் உதவி ஆய்வாளர், திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர், முதல்வர் தனிப்பிரிவு ஆகியவற்றிலும் மனு அளித்துள்ளார். தகுந்த நிவாரணம் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். பின்பு இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் பள்ளி நிர்வாகத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 12 நாட்களே படிக்க செலுத்திய கட்டணம் ரூ.93ஆயிரத்து 500, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1,28,500 பொன்னுசாமிக்கு வழங்க வேண்டும் என தனியார் பள்ளிக்கு உத்தரவிட்டனர்.