தமிழகத்தில் பள்ளி கல்வித் துறைக்கே அதிக நிதி ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்


நாகர்கோவில் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களிடையே பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துரையாடினார்.

நாகர்கோவில்: தமிழகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டாலும், பள்ளிக் கல்வித்துறைக்குத் தான் அரசு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ - மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நாகர்கோவில் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் கலந்து கொண்டு மாணவ - மாணவியரிடையே கலந்துரையாடுகையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து குறிப்பாக அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ - மாணவியருக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார். தமிழ்நாடு அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டாலும், பள்ளிக்கல்வித் துறைக்கு தான் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

காரணம், மாணவ - மாணவியராகிய நீங்கள் தான் எதிர்கால தூண்கள். எனவே அனைவரும் நன்றாக கல்வி பயின்று, ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை முழுமையான கல்வியறிவு பெற்ற மாவட்டமாகும். மேலும், கலைஞரின் கனவை நிறைவேற்றும் வகையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு இடமளித்த மாவட்டம் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

அமைச்சர் அன்பில் மகேசுடன் கலந்துரையாடிய அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள்.

ஒவ்வொரு அமைச்சரும் அவர்களது துறை சார்ந்த பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் இதுநாள் வரை சுமார் 175 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நேரடியாக சென்று துறை சார்ந்த ஆய்வு பணிகள் மேற்கொண்டு இருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் தான் பள்ளிக்கல்வித் துறை நன்றாக முன்னேறி பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

எல்லா நிலைகளிலும் உள்ள மாணவ - மாணவியரை உயர்த்திடும் வகையில் தான் அவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கிட "நான் முதல்வன் திட்டமும்", வறுமையை காரணம் காட்டி எந்தவொரு மாணவியும் படிக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயில மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டமும் முதல்வர் அறிவித்துள்ளார்.

அதேபோன்று மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கும் திட்டம், முதல்வரின் காலை உணவுத் திட்டம், பல்வேறு கலைத் திருவிழாக்கள், இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாணவ - மாணவியராகிய உங்களுக்கு பாடங்களில் எந்தவிதமான சந்தேகங்கள் இருந்தாலும் கையை உயர்த்தி ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்காக பயந்துகொண்டு, கூச்சப்பட்டு கொண்டு இருக்காதீர்கள்.

அறிவை பயன்படுத்தி மூட நம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவியல் சார்ந்து கற்றுக் கொள்ளுங்கள். 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களாகிய நீங்கள் இன்னும் 5 மாதங்கள் நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வி பயின்று, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்" என்று அமைச்சர் மகேஸ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மற்றும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x