’அப்பாவைப் போலவே நேர்மையாக செயல்படுவேன்’ தந்தையின் கனவை நனவாக்கிய தனயன், சிவில் நீதிபதியாக தேர்வு


படுகொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸின் மகன் மார்ஷல் குடும்பத்தினருடன்

தூத்துக்குடி அருகே மணல் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிசின் மகன் மார்ஷல் ஏசுவடியான் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.

தூத்துக்குடி அருகே உள்ள சூசை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் மணல் கொள்ளையர்களால் அலுவலகத்தில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லூர்த்து பிரான்சிசின் 2வது மகனான மார்சல் என்பவர் தமிழக அரசின் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

மறைந்த தந்தை லூர்து பிரான்சிஸ் உடன் சிவில் நீதிபதி மார்ஷல் ஏசுவடியான்

சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள மார்சல் கூறுகையில், ”நேர்மையாக பணியாற்றிய எனது தந்தை மணல் கொள்ளையர்களை தடுத்ததால், வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். எனது தந்தை நான் நீதிபதி ஆக வேண்டும் என விரும்பினார். அவரது கனவை நான் நிறைவேற்றி உள்ளேன். என் தந்தையை போன்று நேர்மையாக செயல்படுவேன்” என தெரிவித்தார்.

சிவில் நீதிபதி தேர்வில் வென்றுள்ள சுரேஷ்குமார்

இதேபோன்று அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரும் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்று உரிமையியல் நீதிபதியாக தேர்வாகி உள்ளார். சுரேஷ்குமார் கூறுகையில், ”எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏற்கனவே நாட்டுக்காக காவல்துறை மற்றும் ராணுவத்தில் சேர்ந்து சேவை பரிந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நான் நீதிபதியாக வேண்டும் என விரும்பினேன். நீதிபதி தேர்வில் நன்றாக படித்து தேர்வாகியுள்ளேன். இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்றார். தூத்துக்குடி அருகே உள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சிவில் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளது அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x