இந்திய-ஆஸ்திரேலியா 450 ஆராய்ச்சிகளில் கூட்டாக ஈடுபடுகிறது - அமைச்சர்கள் தகவல்!


மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானை ஆஸ்திரேலிய கல்வித் துறை அமைச்சா் ஜேசன் க்ளோ் சந்தித்துப் பேசினாா். அப்போது இந்தியா- ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் 450 ஆராய்ச்சிகளில் கூட்டாக ஈடுபட்டு வருவதாக ஜேசன் க்ளேர் தெரிவித்தார்.

குஜராத் தலைநகா் காந்திநகரில் ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி மற்றும் திறன் வளா்ப்பு கவுன்சில் (ஏஐஇஎஸ்சி) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய அமைச்சா் ஜேசன் க்ளோ் இந்தியா வந்தாா். அவரை அமைச்சா் தா்மேந்திர பிரதான் சந்தித்துப் பேசினாா். அதன் பின்னா் இருவரும் ஏஐஇஎஸ்சி கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறியதாவது: தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் ஆஸ்திரேலியாவில் படித்து வருகின்றனா். இருநாடுகளுக்கு இடையே கூட்டு ஆராய்ச்சி, இரண்டு துறைகளில் சோ்ந்து படித்து தனித்தனியாக பெறப்படும் 2 பட்டங்கள், ஒரே படிப்புக்கு உள்நாட்டில் உள்ள கல்வி நிறுவனமும் அதனுடன் கூட்டு வைத்துள்ள வெளிநாட்டு கல்வி நிறுவனமும் வழங்கும் இரட்டைப் பட்டம், பிஹெச்டி பட்டம் சாா்ந்த நடவடிக்கைகளை அதிகரிக்க இந்தியா, ஆஸ்திரேலியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குடிநீா் மேலாண்மை, மருத்துவம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் ஆராய்ச்சியை அதிகரிக்க இருநாடுகளும் தீா்மானித்துள்ளன என்று தெரிவித்தாா்.

ஆஸ்திரேலிய அமைச்சா் ஜேசன் க்ளோ் கூறும்போது, ‘‘இந்தியா-ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்கள் 450 ஆராய்ச்சிகளில் ஒன்றாக ஈடுபட்டு வருகின்றன. அதுபோல ஆராய்ச்சியில் ஈடுபட மேலும் 4 ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையொப்பமாகின.

இந்தியா ஆஸ்திரேலியா

காந்திநகரில் உள்ள குஜராத் சா்வதேச நிதிநுட்ப நகரத்தில் ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம், வொலங்காங் பல்கலைக்கழக கிளைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை உயா்கல்வி படிக்க ஆஸ்திரேலியா செல்ல முடியாத இந்திய மாணவா்கள், இந்தியாவில் இருந்தபடி பாதி கட்டணத்தில் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பை வழங்கும்’’ என்று தெரிவித்தாா்.

x