டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: நவ.18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!


காற்று மாசுவால் திணறும் டெல்லி.

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவம்பர் 9) முதல் நவம்பர்18-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுவால் திணறும் டெல்லி.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு அபாயகரமான நிலையில் உள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் வெளியேறும் நச்சுவாயுக்கள், வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு ஆகியவை காரணமாக காற்றுமாசு அதிகரித்து வருகிறது. எனவே, இந்த நான்கு மாநிலங்களும் விவசாயக் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளின் டிசம்பர் குளிர்கால விடுமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அது இப்போது நவம்பர் 9 முதல் நவம்பர் 18-ம் தேதி வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கல்வி இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.

முன்னதாக மோசமான காற்றின் தரம் காரணமாக நவம்பர் 3-ம் தேதி முதல் நவம்பர் 10-ம்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்று மாசின் காரணமாக அனைத்து பள்ளிகளும் குளிர்கால விடுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். நவம்பவர் 9 முதல் நவம்பர் 18-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி நகரின் காற்றின் தரக் குறியீடு 421 இன்று ஆக இருந்தது. நேற்று மாலை 4 மணிக்கு 395 ஆக இருந்தது. இந்தோ-கங்கை சமவெளி முழுவதும் உள்ள பல நகரங்கள் அபாயகரமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன. அருகிலுள்ள காசியாபாத் (382), குருகிராம் (370), நொய்டா (348), கிரேட்டர் நொய்டா (474), மற்றும் ஃபரிதாபாத் (396) ஆகியவை அபாயகரமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

x