2-வது ஆண்டாக தேசிய நல்லாசிரியர் விருதுப் பட்டியலில் புதுச்சேரிக்கு ஓர் இடம் கூட இல்லை!


புதுச்சேரி: இரண்டாம் ஆண்டாக நடப்பாண்டும் தேசிய நல்லாசிரியர் விருது பட்டியில் புதுச்சேரிக்கு ஓர் இடம் கூட இல்லை.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நாடு முழுவதும் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2024-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. விருது பெறும் நல்லாசிரியர்களுக்கு டெல்லியில் செம்படம்பர் 5-ம் தேதி நடைபெறும் விழாவில் ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் வெள்ளி மெடலும் சான்றிதழும் தரப்படவுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 ஆசிரியர்கள் விருதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 பேர் இடம் பெற்றுள்ளனர். புதுவை மாநிலத்தில் இருந்து இந்த ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், விண்ணப்பித்த ஓர் ஆசிரியர் பெயர்கூட விருதுப் பட்டியலில் இல்லை.

கடந்த 2023-ம் ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு புதுச்சேரியில் இருந்து பலர் விண்ணப்பித்தும் யாரும் தேர்வாகவில்லை. தற்போது இரண்டாம் ஆண்டாக விண்ணபித்த யாரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகாதது புதுச்சேரி கல்வித்துறை வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்தியுள்ள சூழலில் புதுச்சேரியில் ஒருவருக்குக்கூட நல்லாசிரியர் விருது கிடைக்காதது ஏமாற்றத்தை தருவதாக கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

x