இந்திய பெருங்கடலில் விழுந்த கார்டோசாட்-2... இஸ்ரோவின் இன்னொரு சாதனை!


கார்டோசாட்-2 செயற்கைக்கோள்

இஸ்ரோவால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள் செயலிழப்பு செய்யப்பட்ட நிலையில், வளிமண்டலத்தில் எரிந்து இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ‘இஸ்ரோ’ கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி கார்டோசாட்-2 செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியது. நிலப்பரப்புகளை படம் பிடித்து, நகர அமைப்புக்கு உதவிடும் வகையில் இந்த செயற்கைக்கோள் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. உயர் தெளிவுத்திறன் படங்களை எடுக்கும் 2-ம் தலைமுறை வகையைச் சேர்ந்த இந்த கார்ட்டோசாட் செயற்கைக்கோள், பூமியிலிருந்து 635 கிலோ மீட்டர் தொலைவில் பூமியைச் சுற்றி வந்தது.

இஸ்ரோ

கடந்த 2019-ம் ஆண்டு வரையிலும் அதிஉயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இந்த செயற்கைக்கோள் அனுப்பி வந்தது. இது 30 ஆண்டுகள் வரைக்கும் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் விண்வெளி கழிவுகளை குறைக்கும் வகையில் இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

இதன்படி செயற்கைக்கோளிலிருந்த எரிபொருளைப் பயன்படுத்தி பூமிக்கு135 கிலோமீட்டர் தொலைவில் அது பூமியை சுற்றி வரும் வகையில் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து செயற்கைக்கோளில் இருந்த சாதனங்கள் ஒவ்வொன்றாக செயலிழப்பு செய்யப்பட்டது.

கடலில் விழுந்த கார்டோசாட்-2 செயற்கைக்கோளின் பாதை

இதையடுத்து கடந்த 14-ம் தேதி இந்திய பெருங்கடல் பகுதியில் கார்டோசாட்-2 வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. வளிமண்டலத்தில் நுழைந்த சிறிது நேரத்திலேயே அதிக வெப்பம் காரணமாக செயற்கைக்கோளின் பல்வேறு பாகங்கள் முற்றிலும் எரிந்து இருக்கலாம் என இஸ்ரோ கணித்துள்ளது.

இந்த செயல்பாட்டின் மூலம், சர்வதேச அளவில் விண்வெளி கழிவுகளை கையாள்வதில் இஸ்ரோ முக்கிய மைல்கல்லை தொட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

x