ஐஐடி மெட்ராஸ் வரலாற்று சாதனை... சர்வதேச அளவில் கால்பரப்பும் முதல் இந்திய ஐஐடி!


சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ்

இந்தியாவுக்கு வெளியே முதல் ஐஐடி நிறுவனமாக, தான்சானியாவின் சான்சிபாரில் தனது வளாக உயர்கல்வி நிலையத்தை அமைத்துள்ளது ஐஐடி மெட்ராஸ். வெளிநாடுகளில் கால்பரப்ப ஐஐடி டெல்லி, ஐஐடி காரக்பூர் ஆகியவை தயாராகி வந்த நிலையில் ஐஐடி மெட்ராஸ் முந்தியுள்ளது.

ஆப்பிரிக்க தேசமான தான்சானியாவின் தன்னாட்சி பெற்ற சான்சிபாரில் அதன் அதிபர் ஹுசைன் அலி முவினி, அங்கு அமைக்கப்பட்டுள்ள மெட்ராஸ் ஐஐடியின் வளாகத்தை நேற்று திறந்து வைத்திருக்கிறார். இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமான ஐஐடியின் வளாகக் கிளை இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்படுவது இதுவே முதலாவதாகும். இதன் மூலம் இந்தியாவின் பெருமைக்குரிய ஐஐடி சர்வதேச பார்வைக்கு சென்றுள்ளது.

சான்சிபார் நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள ப்வேலியோவில் ஐஐடி மெட்ராஸ் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச வசதிகளுடன் கூடிய புதிய நிரந்தர வளாகத்தை சான்சிபார் - இந்திய அரசுகள் இணைந்து விரைவில் அமைக்க இருக்கின்றன. பிஎஸ் மற்றும் எம்டெக் ஆகியவற்றில் டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை இங்கு பயிற்றுவிக்கப்பட இருக்கின்றன.

ஐஐடி மெட்ராஸ் சான்சிபாரில், சான்சிபார், தான்சானியா மட்டுமன்றி, நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களும் தங்கி பயில இருக்கின்றனர். இவர்களில் 40 சதவீதத்தினர் மாணவிகளாக இருப்பார்கள். அலுவலகம், வகுப்பறை, ஆடிட்டோரியம், உணவகம், மருந்தகம் மற்றும் விளையாட்டு திடல்கள் என சர்வதேச தரத்தில் சான்சிபார் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் வளாகம்

நடப்பு கல்வியாண்டுக்கான படிப்புகள் கடந்த மாதம் தொடங்கி உள்ளன. வரும் கல்வியாண்டு முதல் கடல்சார் அறிவியல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த 5 தொழிற்படிப்புகள் அங்கே தொடங்கப்பட இருக்கின்றன. ஐஐடி மெட்ராஸில் இருப்பது போன்றே, சான்சிபாரிலும் ஆய்வு மையமும் அமைக்கப்பட இருக்கிறது.

டெல்லி ஐஐடி அபுதாபியிலும், காரபூர் ஐஐடி மலேசியாவிலும் தங்களது இந்தியாவுக்கு வெளியிலான வளாகங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், சான்சிபார் ஒத்துழைப்பில் ஐஐடி மெட்ராஸ் முந்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x