பேருந்து வசதியே இல்லாத கிராமம் | அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் @ காரைக்குடி


மாணவர் நாகராஜ், மாணவர் ரவி

காரைக்குடி: காரைக்குடி அருகே பேருந்து வசதியே இல்லாத கிராமத்தைச் சேர்ந்த 2 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கமலை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதி பெரியசாமி, விஜயா. இவர்களது மகன் நாகராஜ் (17). மாற்றுத்திறனாளியான, இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார்.

பின்னர் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 3.5 கி.மீ. நடந்தே பள்ளிக்குச் சென்று வந்தார். அதன் பின்னர், அரசு கொடுத்த இலவச சைக்கிள் மூலம் பள்ளிக்குச் சென்று வந்தார்.

மேலும் அவர் பள்ளிக்கு புறப்படும் முன்பாக வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு தீவனம் வைத்துவிட்டு தான் செல்வார். ஓய்வு நேரம், பள்ளி விடுமுறை நாட்களில் ஆடு, மாடு மேய்த்து கொண்டே படித்து வந்தார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து 136 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.

மேலும் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி உடையப்பன், காளியம்மாள். இவர்களது மகன் ரவி. இவரது சிறுவயதிலேயே தாயார் காளி யம்மாள் உயிரிழந்தார். ஐந்தாம் வகுப்பு வரை கமலையில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி யில் ரவி படித்தார்.

பின்னர் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பீர்கலைக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இவரும் பத்தம் வகுப்பு வரை நடந்தும், பிளஸ்1, பிளஸ் 2 வகுப்பு வரை சைக்கிளில் சென்று படித்து வந்தார். மேலும் இவரது ஏழ்மையை அறிந்து ஆசிரியர்கள், அக்கம்பக்கத்தினர் இம்மாணவர் தொடர்ந்து கல்வி பயில பல்வேறு உதவிகளை செய்தனர். இந்நிலையில் நீட் தேர்வில் 597 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றார்.

இவருக்கு அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. பேருந்து வசதியே இல்லாத கிராமத்தைச் சேர்ந்த ஒரே அரசு பள்ளியில் படித்த 2 மாணவர்களுக்கு ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது, அப்பகுதி மக்க ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத் தியது.

மேலும் அவர்கள் மருத்துவம் படிக்க தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

x