காற்றில் பறக்கும் அரசு உத்தரவு... அரசுப் பள்ளி கழிவறைகளைச் சுத்தம் செய்த மாணவிகள்!


கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் மாணவிகள்

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கழிப்பறையைச் சுத்தம் செய்யும் மாணவி

கர்நாடகா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரை கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைக்கும் கொடூரச் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா, பெங்களூரு, கோலார், கல்புர்கி ஆகிய நகரங்களைத் தொடர்ந்து தாவண்கெரேவில் உள்ள அரசு பள்ளியிலும் இந்த மனிதாபிமானமற்ற செயல் நடந்துள்ளது.

அரசு தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைகளைச் சுத்தம் செய்ய மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற கர்நாடகா அரசு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது.

அதனையும் மீறி தாவண்கெரே தாலுகா மெல்லகேட் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் பள்ளிச்சீருடையில் இருந்த மாணவிகள், கழிவறைகளைத் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்வதும், வாளியில் தண்ணீர் கொண்டு கழிவறைகளைச் சுத்தம் செய்த கொடூரச் செயல் நடந்துள்ளது.

இந்த பள்ளியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் கழிவறைகளைச் சுத்தம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ' காந்தியே தனது கழிவறையைச் சுத்தம் செய்து வந்தார். சுத்தம் செய்தால் தவறில்லை' என தலைமை ஆசிரியர் மாணவிகளை அறிவுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரசு தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கினாலும் வேண்டுமென்றே அவற்றை மீறி மாணவிகளை மனிதாபிமானமற்ற முறையில் பயன்படுத்திய இந்த பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x