மருத்துவ கலந்தாய்வு முதல் சுற்றில் தமிழக மாணவர் உட்பட 17 பேருக்கு டெல்லி எய்ம்ஸ்ஸில் இடம் கிடைத்தது


சென்னை: நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024 - 25-ம்கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்களை மருத்துவக்கலந்தாய்வு குழு இணையதளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதில், தமிழக அரசு நடத்தும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதல் இடத்தைபிடித்த பி.ரஜனீஷ் தரவரிசை பட்டியலிலும் முதலிடம் பிடித்திருந்தார்.

அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. பி.ரஜனீஷ் உட்பட நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த 17 மாணவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

x