நிறைவேறிய 30 ஆண்டு கால கோரிக்கை: சாதியை துறந்து பெரியாரை ஏற்ற மக்கள்


தந்தை பெரியார் நகர் என பெயர் மாறிய அரிஜன காலனி

கோவை சரவணம்பட்டியில் 30 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று ’அரிஜன காலனி’ என்ற தெருவின் பெயர் ’தந்தை பெரியார் நகர்’ என மாற்றப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி சரவணம்பட்டி 10வது வார்டில் அமைந்துள்ள ’அரிஜன காலனி’ என்ற பகுதியின் பெயரை ’தந்தை பெரியார் நகர்’ என மாற்ற வேண்டும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இது குறித்து கடந்த 30 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர்களிடமும், அரசிடமும் மனுக்களை வழங்கினர்.

ஆனால் பெயர் மாற்றாமல் இருந்த நிலையில் அப்பகுதி மக்களே தந்தை பெரியார் நகர் என பெயரை மாற்றி அழைத்து வந்ததோடு முகவரியோடு இணைத்து பயன்படுத்தி வந்தனர். ஆனால் அரசு கெஜட்டிலும், ஆதார், ரேஷன் போன்ற ஆவணங்களிலும் அந்த பெயர் இடம் பெறாமல் அரிஜன காலனி என்றே இருந்து வந்தது.

தமிழ்நாடு அரசு கெஜட்டில் பெயர் மாற்றம்

மேலும் வாக்காளர் பட்டியலில் பழைய பெயரிலேயே இருந்து வந்தது. இந்நிலையில் அப்பகுதியின் பெயரை அரசு கெஜட்டில் தந்தை பெரியார் நகர் என மாற்ற கோரி வார்டு கவுன்சிலரும், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேலிடம் மனு அளித்தனர்.

அவர் கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அப்பகுதியின் பெயரானது தற்போது தந்தை பெரியார் நகர் என மாற்றப்பட்டுள்ளது.

இனி எல்லா ஆவணங்களில் சாதி பெயரிலான காலனி பெயர் நீக்கப்படும்

மேலும் வாக்காளர் பட்டியலிலும் தந்தை பெரியார் நகர் என வரும் என்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜாதியை குறிப்பிடும் காலனி பெயரை விடுத்து, அதை ஒழிக்க பாடுபட்ட பெரியாரின் பெயரை வைத்துள்ளதால் இனி வரும் தலைமுறையினரும் அவர் யார் என்பதை எளிதாக தெரிந்து கொள்வார்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!

ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!

x