அசத்தல் அறிவிப்பு... அரசுப்பள்ளிகளில் தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!


வகுப்பறை - மாதிரிப் படம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களின் போது மாலை வேளையில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு நீட், ஜேஇஇ போன்ற தகுதி தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது போல் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு பல்கலைக்கழகங்களிலும், தனியார் பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜேஇஇ எனும் பயிற்சி தேவைப்படுகிறது.

பெரும்பாலான சாதாரண ஏழை எளிய மாணவர்களுக்கான மருத்துவக் கனவு என்பது நீட் தேர்வுக்கு பிறகு கானல் நீராகிவிட்டது. அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் தரப்பில் பல்வேறு முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் நீட் தேர்வு கட்டாயம் என்ற நடைமுறையே தற்போது தொடர்கிறது.

நீட் தேர்வுக்கென பயிற்சி மையங்கள் இந்தியா முழுவதும் முளைத்துள்ளன. இவைகளில் எல்லாம் பல லட்சங்களை செலவு செய்து படிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இந்த நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக அரசுபள்ளி மாணவர்களுக்கும் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவை வாரந்தோறும் அளிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களால் பெரிய அளவில் சோபிக்க முடியாத நிலை இருந்தது. எனவே நீட் தேர்வுக்கு தீவிரமாக பயிற்சியளிக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பில் தொடர்ச்சியாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அரசுப்பள்ளி மாணவர்கள்

அந்த வகையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் வாரத்தில் 5 நாட்களும் நீட், ஜேஇஇ பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தினமும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

x