மாணவர்களின் செயல்பாடுகளை தினமும் கண்காணிக்க செயலி: பள்ளிக்கல்வி அமைச்சர் தகவல்


சென்னை: பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளை தினமும் கண்காணிக்க விரைவில் புதிய செயலி உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

பள்ளிக்கல்வித் துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநிலக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது:

ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெறுவதைப்போல பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டமும் நடத்தப்பட வேண்டும். பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்.

மாணவர்களின் தினசரி செயல்பாடுகளைக் கண்காணிக்க விரைவில் புதிய செயலி உருவாக்கப்பட உள்ளது. இந்த செயலியைபெற்றோர் ஆசிரியர் கழகம்உருவாக்கும். பள்ளிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டால் உடனடியாக அவற்றை களைய நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக்கல்வி அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்.

முகாம் நடத்த கட்டுப்பாடு: பர்கூர் தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வை கருத்தில்கொண்டு என்சிசி, என்எஸ்எஸ், சாரண - சாரணியர் முகாம்கள் நடத்த தனியார்பள்ளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. உரிய அனுமதி பெறாமல் தனியார் பள்ளிகள் எந்தவிதமான முகாம்களையும் நடத்தக்கூடாது.

பள்ளிகளில் ஏதேனும் தவறுகள் நடந்தால் பள்ளி நிர்வாகத்தினர் அவற்றை மூடி மறைக்கக் கூடாது.உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான் நம்பிக்கை ஏற்படும். அரசு பள்ளியிலோ அல்லது தனியார் பள்ளியிலோ தவறு எங்கு நடந்தாலும் அரசுக்கு அது தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

x