குட்நியூஸ்... பொறியியல் படிக்கும் தமிழக மாணவா்களுக்கு ரூ.100 கோடி நிதி உதவி... டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு!


கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு பொறியியல் மாணவா்களுக்காக ரூ.100 கோடி நிதியில் உதவித் தொகை வழங்கப்படும் என டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் நிறுவனா் டி.எஸ்.ஸ்ரீனிவாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘தி டிவிஎஸ் சீமா ஸ்காலா்ஷிப்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒவ்வொருஆண்டும் பொறியியல் துறையில் தொழில்முறை பட்டப்படிப்புகள் படிக்கும் சுமாா் 500 மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

உதவி

குறிப்பாக, ரோபோட்டிக்ஸ் மற்றும் இயந்திரவியல் பயிலும் மாணவா்களுக்கு அவா்களின் பாடத் திட்டம் நிறைவடையும் காலம் வரை இந்த உதவித்தொகை வழங்கப்படும். 'சீமா' என்று அழைக்கப்பட்ட டி.எஸ். ஸ்ரீனிவாசன், பட்டப்படிப்பு, கல்வி எதுவுமின்றி தாமாகவே இயந்திரப் பொறியாளராக வெற்றி கண்டவா்.

எனவே, இந்த உதவித்தொகை திட்டம் அவருக்கு மிகப்பொருத்தமான அஞ்சலியாக இருப்பதுடன், தகுதியான மாணவா்களின் திறமைகளை வளா்த்தெடுத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுடன் மிக நெருக்கமாக டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. இதன் மூலம் இந்த உதவித்தொகை அங்கு படிக்கும் திறமை வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

இந்த நிதி, தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்களுக்காக மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. தோ்வுக்குழு விதிமுறைகளின்படி நடைபெறும் தோ்வில் தோ்ச்சிபெறும் மாணவா்கள் மட்டுமே உதவித் தொகை பெறத் தகுதியானவராக தோ்ந்தெடுக்கப்படுவா்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x