நாடெங்கும் வளரும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள்... மதுரை எய்ம்ஸ் நிலவரம் குறித்து மத்திய அமைச்சரின் அப்டேட் இதுதான்!


தற்போது வரை நாடெங்கும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்

மக்களவைத் தேர்தல் நெருங்குவதில், மத்திய அரசின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மற்றும் அதன் புதிய கட்டுமானங்கள் மீண்டும் பேசுபொருளாகி இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் நீண்ட காலமாக முடங்கிக்கிடந்த மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கும் பெயரளவில் உயிரூட்டி இருக்கிறார்கள். கட்டுமானத்துக்காக சுற்றுச்சுழல் அனுமதி கோரி மதுரை எய்ம்ஸ் சார்பில் விண்ணப்பித்து இருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா

மதுரை எய்ம்ஸ் உட்பட நாடெங்கிலும், இதுவரை ஒப்புதல் பெறப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா இன்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி “பிரதம மந்திரியின் ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 22 அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) அமைக்க இன்று வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

”இந்த 22 எய்ம்ஸ்களில், போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ், நாக்பூர், பிலாஸ்பூர், கோரக்பூர், ரேபரேலி, தியோகர், பதிண்டா, கல்யாணி, மங்களகிரி, பீபிநகர் மற்றும் குவஹாத்தி ஆகிய இடங்களில் உள்ள 16 எய்ம்ஸ்களில், கற்றல் - கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் நோயாளி பராமரிப்பு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த 16-ல் போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களின் எய்ம்ஸ் மருத்துவமனைகள் முழுமையாக செயல்பட்டு வருகின்றன” எனவும் மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம்

இந்த 16 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தவிர, ராஜ்கோட் (குஜராத்), விஜய்பூர் (ஜம்மு), மதுரை (தமிழ்நாடு), அவந்திபோரா (காஷ்மீர்), ரேவாரி (ஹரியானா) மற்றும் தர்பங்கா (பீகார்) ஆகிய இடங்களில் உள்ள ஆறு எய்ம்ஸ்கள், செயல்பாட்டுக்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இந்த வகையில் மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள், குறிப்பிட்ட கட்டத்தில் செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அது எந்த கட்டம் என்பதுதான் தெளிவாக விளக்கப்படவில்லை. மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக, குறிப்பிடத்தக்க அந்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம். அல்லாது போயின், மதுரை எய்ம்ஸ் செங்கலுக்கு, இந்த தேர்தல் பிரச்சாரத்திலும் வேலை வரக்கூடும்.

x