குட்நியூஸ்... ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆசிரியர்களுக்கு 31-ம் தேதி பொதுமாறுதல் கலந்தாய்வு!


ஆதிதிராவிடர் நலப்பள்ளி

தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அக்.31-ம் தேதி நடைபெறும் என துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் (2023-24) ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து தலைமையாசிரியர், முதுநிலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், தமிழாசிரியர், காப்பாளர் ஆகியோர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி

நீதிமன்ற உத்தரவின் காரணமாக இந்த பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் எதிர்வரும் 31-ம் தேதி அன்று பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகங்களில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என்றும், மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் குளறுபடிகள் ஏதேனும் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆதிதிராவிட நலத்துறை எச்சரித்துள்ளது.

x