கலைத் திருவிழாவில் ஓவியப் போட்டி பிரிவுகள் குறைப்பு: மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம்


திருப்பூர்: பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில், ஓவியப் போட்டிகளின் பிரிவுகள் குறைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஒ.சுந்தரமூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநருக்கு இன்று (ஆக. 19) அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடத்தப்படும் கலைத் திருவிழா 2024ம் ஆண்டுக்கான போட்டிகள் வரும் 22ம் தேதி முதல் நடைபெறுகின்றன. அதற்காக இணையத்தில் மாணவர்களின் விவரப் பதிவுகள் துவங்கி உள்ளன.

அனைத்து மாணவர்களும் கலைத் திருவிழாவில் ஏதேனும் ஒரு போட்டியிலாவது பங்கேற்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்திட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்பொருட்டு அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலைத் திருவிழாவில் தங்கள் திறன்களை வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஓவியப் போட்டிகள் கடந்த ஆண்டு வரை 11 வகையான பிரிவுகளில் நடத்தப்பட்டன.

மாணவர்களும் 11 போட்டிகளிலும் பங்கேற்று 33 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் நடப்பாண்டில் ஓவியப் போட்டிகள் குறைக்கப்பட்டு 4 பிரிவுகளில் மட்டும் நடத்த பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெற்றியாளர்களின் எண்ணிக்கை 12 ஆக குறையும். இந்த சம்பவதால் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் ஓவியப் பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே எந்தவொரு போட்டிகளிலும் வகைப்பாடுகளைக் குறைக்காமல், மேலும் பல பிரிவுகளை உருவாக்கி பல பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றுப் பரிசுகள் பெரும் நிலையை பள்ளிக்கல்வித் துறையை உருவாக்கித் தர வேண்டும். போட்டிகள் குறைப்பு அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் மனத்தில் ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தை போக்க வேண்டும்.

இதுவரை நடைமுறையில் இருந்த 11 வகையான ஓவியப்போட்டிகளும், இந்த ஆண்டும் நடைபெறும் என்ற அறிவிப்பை ஆணையாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்க வேண்டும்" என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

x