தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழாவை நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 37,576 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்டு முழுவதும் பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினவிழா, குடியரசு தின விழா, குழந்தைகள் தினவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தப்பட்டு, மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகிறது.
இதனிடையே, மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விழா நடத்த வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரும் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில், ”கல்வியாண்டு முழுவதும் பள்ளிகளில் நிகழும் தொடர்ச்சியான கல்வி மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பை, ஆண்டு இறுதியில் பெற்றோர்கள் முன்னிலையில் வெளிப்படுத்த, ஆண்டுவிழா நல்வாய்ப்பாக அமைகிறது.
அனைத்து அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஆண்டு விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு விழா நடத்துவதற்கு ஏதுவாக 14.93 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளுக்கு நிதி வழங்கப்படும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக மாணவர்களின் எண்ணிக்கை 100-க்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, தலா 2,500 ரூபாயும், அதிகபட்சமாக 2,000 மாணவர்களுக்கும் மேல் உள்ள பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.