பள்ளி வளாகத்தில் நடைபயிற்சி செய்வோரால் மாணவர்கள் அவதி @திருப்பூர்


திருப்பூர் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபயிற்சி மேற்கொள்வோர்.

திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா நகரவை பள்ளியில் நடைபயிற்சி மேற்கொள்வோர், நேர ஒழுங்கை கடைபிடிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்பூர் மாநகரில் வாழும் பலர் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிக்கண்ணா கல்லூரியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதில், மாநகரில் வாழும் பலருக்கு காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள உகந்த இடமாக நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பல ஆண்டுகாலமாக நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால், சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்த பிறகும், நடைபயிற்சி மேற்கொள்வது தொடர்வதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதிக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “திருப்பூர் மாநகரின் மத்தியில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற இடமாக நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருப்பூர் மாநகர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில் பெரும்பான்மையான குழந்தைகளின் பெற்றோர், பனியன் நிறுவனங்களில் தொழிலாளியாக வேலைக்கு செல்பவர்கள்.

காலையில் சீக்கிரமாகவே வேலைக்கு செல்ல நேரிடுவதால், குழந்தைகளையும் பள்ளிக்கு தயார் செய்து அனுப்பிவைப்பார்கள். ஆனால், குழந்தைகள் பள்ளிக்கு வந்த பின்னரும், பலர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நடைபயிற்சி மேற்கொள்ளும் நேரம் தொடர்பாக பள்ளி வளாகத்தில்
வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பதாகை.

இதுதொடர்பாக, பள்ளியின் முன்பு தகவல் பலகை வைக்கப்பட்டிருப்பதையும் யாரும் பொருட்படுத்துவதில்லை. பலர் காலை 8 மணிக்கு பின்னரும், சிலர் 8.30 மணிக்கு பின்னரும் நடைபயிற்சி மேற்கொள்ள வருகின்றனர். அதேபோல், மாலையில் மாணவர்கள் முழுமையாக வெளியேறிய பின்பு உள்ளே வராமல், முன்னதாக நுழைபவர்களும் உண்டு.

இதனால் குழந்தைகளுக்கான பள்ளியின் சூழல் மாறுகிறது. குழந்தைகள் பலர் காலை உணவை பள்ளிக்கு கொண்டு வந்து, விளையாட்டு மைதானத்தில் நிழலில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதேபோல், தேர்வு நேரத்தில் மரத்தடி நிழலில் மாணவர்கள் அமர்ந்து படிப்பதையும் பார்க்கிறோம்.

ஆனால், சமீப நாட்களாக நடைபயிற்சி மேற்கொள்வோர் உரிய நேரத்தை பின்பற்றுவதில்லை. காலை நேரத்தில் மணி அடித்தபின்பு பலர் பள்ளிக்குள் நடைபயிற்சிக்காக நுழைகின்றனர். இவை தவிர்க்கப்பட வேண்டும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பலர் முன்னாள் மாணவர்கள்தான்.

அவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆக்கப்பூர்வ விஷயங்களை செய்துள்ளனர். அதேபோல், இந்த நேர கட்டுப்பாட்டையும் பின்பற்றினால், பள்ளியின் சூழல் நல்ல முறையில் இருக்கும். நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் நேரத்தை பள்ளியோ அல்லது மாநகராட்சியோ முறைப்படுத்துவதில்லை. இனிவரும் நாட்களில் முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

x