விருதுநகரில் மாநில அளவிலான வினாடி - வினா போட்டி


விருதுநகர்: விருதுநகரில் 3-வது புத்தக திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி - வினா போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக.18) நடைபெற்று வருகிறது.

விருதுநகரில் 3-வது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாட்டை சேர்ந்த போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு வினாடி - வினா போட்டி அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி கலையங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 215 அணிகள் இதில் பங்கேற்றன. இந்த வினாடி - வினா போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.

போட்டிகளை மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். வினாடி - வினா போட்டி 3 நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல் நிலையில் எழுத்து தேர்வு. இதில் 50 வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கேட்கப்படும். இதில் 25 வினாக்கள் கொள்குறி வகையாகவும், 25 வினாக்கள் நேரடியாக பதிலளிக்கும் வகையிலும் அமைந்தது. போட்டியில் மாணவர்கள் 3 பேர் கொண்ட அணிகளாக பங்கேற்றனர்.

எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் 12 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வு செய்யப்படும். அரையிறுதி போட்டி 4 சுற்றுகளாக நடத்தப்படும். அரையிறுதியில் இருந்து சிறப்பாக செயல்படும் 6 அணிகள் இறுதி நிலைக்குத் தேர்வு செய்யப்படும். இறுதி நிலை 6 சுற்றுகளாக, நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

x