உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இனி என்னாகும்? சர்ச்சையாகும் யுஜிசி வரைவு விதிகள்


யுஜிசி

உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையினை நடைமுறைப்படுத்துவதில் யுஜிசி முன்வைத்திருக்கும் புதிய ஏற்பாடு சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரில் தகுதியானவர்கள் கிடைக்காதபோது, அந்த இடத்தை ரத்து செய்துவிட்டு பொதுப்பிரிவினரைக் கொண்டு அதனை நிரப்ப பல்கலைக்கழக மானியக்குழு முன்வந்திருக்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையினை ஒழிப்பதற்கான உத்தி என பொதுவெளியில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.

பல்கலைக்கழக மானியக்குழு

இடஒதுக்கீடு அடிப்படையிலான பணியிடங்களை நிரப்புவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பல்வேறு வழிகாட்டுதல்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அவற்றிலிருந்து விடுபட்டதாக யுஜிசியின் வரைவு விதி முன்வைக்கும் ஏற்பாடுகள் இட ஒதுக்கீடுக்கு எதிரானது என்றும், இடஒதுக்கீடு முறையை முற்றிலும் ஒழிப்பதற்கான உத்தி என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மத்திய அரசின் பணிவாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடைமுறைகள் என்பது கடந்த 75 ஆண்டுகளாக எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கும் கடந்த 33 ஆண்டுகளாக ஓபிசி பிரிவினருக்கும் நடைமுறையில் இருப்பதாகும். ஆனபோதும், தேசத்தின் உயரிய கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆகியவற்றில் அவை இன்னமும் ஒற்றை இலக்கத்தில் இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் சுட்டிக்காட்டி உள்ளனர்.

ஐஐடி டெல்லி

இந்த சூழலில் நிர்வாக நடைமுறைகளின் பெயரில் இடஒதுக்கீடு முறைக்கு எதிரானதாக யுஜிசியின் வரைவு விதி சர்ச்சைக்கு ஆளாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருக்கத்தில் இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல் மற்றும் அது தொடர்பான ஆதாயம், சேதாரம் குறித்த அலசல்கள் பொதுவெளியில் அதிகரித்துள்ளன.

x