சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்திய அரசியல் அமைப்பு சட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை போட்டியை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு: "இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உருவாக்கம்: முக்கிய நிகழ்வுகளும், தலைவர்களும்" (The Making of the Indian Constitution Key Figures and Milestones). 10-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு: "இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள சமூகநீதிக்கான பாதுகாப்பு அம்சங்கள்" (Constitutional Safeguards for Social Justice in India). கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டுரை தலைப்பு: "இந்திய அரசியலமைப்பு சட்டம் காட்டும் அடிப்படை கடமைகள்: உரிமைகளையும், பொறுப்புகளையும் சமப்படுத்துதல்" (Constitutional Fundamental Duties: Balancing Rights and Responsibilities) .
கட்டுரையானது மாணவர்களின் சொந்த கையெழுத்தி்ல் ஏ-4 தாளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தட்டச்சு செய்யக்கூடாது. பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை 1500 வார்த்தைகள் முதல் 2000 வார்த்தைகள் வரையும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை 2500 வார்த்தைகள் முதல் 3000 வார்த்தைகள் வரையும் இருக்கலாம். கட்டுரையை செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் "The Deputy Secretary to Governor (Universities), Governor's Secretariate, Raj Bhavan, Chennai 600 022" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் தங்கள் பெயர், படிக்கும் வகுப்பு, கல்வி நிறுவனத்தின் பெயர், மற்றும் தங்கள் முழு முகவரியுடன் இந்த கட்டுரையை தாங்கள்தான் எழுதியது என்ற சுயஉறுதிமொழி சான்றையும் கட்டுரையோடு இணைக்க வேண்டும். முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.30,000. மூன்றாம் பரிசு ரூ.25000. ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி பரிசுகள் வழங்கப்படும்.போட்டியின் முடிவுகள் நவம்பர் மாதம் 26-ம்தேதி அன்று அறிவிக்கப்படும். வெற்றிபெறுவோருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தினவிழாவில் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.