பகீர்...பல்கலைக்கழகத்தில் 40,000 ரூபாய்க்கு போலி பட்டங்கள் விற்பனை... அதிர வைக்கும் உ.பி!


ஜான்பூரில் உள்ள பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எட் போலி பட்டங்கள் 40,000 முதல் 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக ஊழியர்கள் இருவர் உள்பட மூன்று பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலி பட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக ஊழியர்கள் வெளியாட்களின் உதவியோடு போலி பட்டங்களைத் தயார் செய்து விற்பனை செய்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சாப்ராவைச் சேர்ந்த விஷ்ணுபிரசாத் சௌபே, பீகாரில் உள்ள அராவைச் சேர்ந்த ரவிகாந்த் திவாரி ஆகிய இருவரும் போலிப் பட்டங்களைப் பெற்றுள்ளதாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு ஆதாரத்துடன் புகார் அனுப்பப்பட்டது. இதன் பின் தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து சராய் குவாஜா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து பி.எட் மற்றும் பி.பார்ம் போலி பட்டங்களை 40,000 முதல் 50,000 ரூபாய்க்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சந்தோஷ் திவாரி, அனில் சிங் ஆகியோர் விஷ்ணுபிரசாத், ரவிகாந்த் திவாரிக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்களுக்கு உடந்தையாக சுவாமிநாத் மிஸ்ரா என்பவர் இருந்ததும் தெரிய வந்தது. அவர்கள் மூவர் மீதும் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வந்தனா சிங் கூறுகையில், " இந்த விவகாரத்தை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

காவல் துறை அதிகாரி உபாத்யாய் கூறுகையில், "போலி பட்டங்களை உருவாக்கி விற்பனை செய்ததற்காக பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் பி.எஸ்.சிங் உள்பட மூன்று பேர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போலி பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பங்களிப்பு அவசியம் வெளியே வரும்" என்றார்.

பல்கலைக்கழத்தில் போலி சான்றிதழ் தயார் செய்து விற்பனை செய்யப்பட்ட விவகாரம், உத்தரப்பிரதேசத்தில் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

x