திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க கோரிக்கை வலுப்பது ஏன்?


திருவள்ளூர்: மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக தலைநகர் சென்னையை ஒட்டியுள்ளது திருவள்ளூர். இம்மாவட்டம், இன்றைய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய செங்கல்பட்டு - எம்.ஜி.ஆர் மாவட்டத்தில் இருந்து, இரண்டாகப் பிரிக்கப்பட்டு கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி 1-ல் உருவாக்கப்பட்டது. 3,394 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில் தற்போது சுமார் 46 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகராக உள்ளதிருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி இல்லாததால், திருவள்ளூர் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் உயர் கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. ஆகவே, திருவள்ளூரில் அரசுகலைக் கல்லூரி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட துணைத் தலைவரான உதயநிலா தெரிவித்ததாவது: மாவட்டத் தலைநகரான திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, காக்களூர், மணவாளநகர், கடம்பத்தூர், பூண்டி, வெள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில், 20-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆண்டு தோறும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ - மாணவிகள் பிளஸ் 2 முடிக்கின்றனர்.

ஆனால், இவர்கள் எளிதாக உயர் கல்வி பயில ஏதுவாக மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி இல்லை. இதனால், ஏழை, எளிய மாணவ - மாணவிகள் திருவள்ளூரில் இருந்து சுமார் 40 கி.மீ., தூரத்தில் உள்ள திருத்தணி மற்றும் பொன்னேரியில் உள்ள அரசு கலைக்கல்லூரிகள் அல்லது சுமார் 50 கி.மீ., தூரத்தில் சென்னையில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்கு கேட்க வரும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தவறாமல் ’திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்’ என வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால், அரசு கலைக்கல்லூரி மட்டும் வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழக தமிழாசிரியர் கழகத்தின் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் தலைவர் சம்பந்தம் தெரிவித்ததாவது: திருவள்ளூர் மாவட்டம் உருவாகி 27 ஆண்டுகள் கடந்து விட்டது. இந்நிலையில், மாவட்டத் தலைநகரான திருவள்ளூரிலும், அதனைச் சுற்றியுள்ள பட்டரைபெரும்புதூர், திருப்பாச்சூர், பெருமாள்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் அரசு மருத்துவக்கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி மற்றும் 10-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளும், 5-க்கும் மேற்பட்ட தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன.

ஆனால், கலை அறிவியல் படிப்புகளை படிக்க விரும்பும் திருவள்ளூர் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை - எளிய மாணவ - மாணவியர், தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி ஆகிய வட்டங்களில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளை சுமார் 40 கி.மீ., தூரத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளுக்கு அனுப்பி படிக்க வைக்க தயக்கம் காட்டுகின்றனர்.

ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தின் மையப்பகுதிகளாக உள்ள திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி ஆகிய வட்டங்களை சேர்ந்த ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ - மாணவிகளின் உயர்கல்வி தடைபடாமல் இருக்க ஏதுவாக, இனியாவது திருவள்ளூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து, திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் தரப்பினர் கூறும்போது, ’’திருவள்ளூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்பேரவையில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்.

அதுமட்டுமல்லாமல், திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் மற்றும் வரதாபுரம் பகுதிகளில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஏதாவது ஒன்றில் அரசு கலைக்கல்லூரி அமைக்கலாம் என அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். அந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

x