'இஸ்ரேலை வீழ்த்து' முழக்கம்... பல்கலைக்கழக மாணவிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு!


ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவிகள் போராட்டம்.

ஹைதராபாத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவிகள் இன்று திடீர் எனப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தரைமட்டமான கட்டிடங்கள்

பாலஸ்தீனத்தின் காஸா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளி குழுக்கள் கடந்த 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹமாஸுக்கு எதிராக போர் தொடங்கியதாக இஸ்ரேல் அறிவித்தது. காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து வான்வழியாக கடும் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் தரைமட்டமானதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

காஸா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிய அளவில் சேதம் அடைந்துள்ளன. ஐ.நா. பள்ளிகளிலும், அருகில் உள்ள கட்டிடங்களிலும் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இருதரப்பிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 2,400-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், தரைவழி தாக்குதலை மேற்கொள்ள இஸ்ரேல் ராணுவம் ஆயத்தமாகி வருகிறது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தெலங்கானா மாநிலம்,ஹைதராபாத் பல்கலைக்கழக பெண் மாணவிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். பஷீர் பாக் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதுடன் இஸ்ரேல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து கோஷமிட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தினர்.

போலீஸார் கைப்பற்றிய பதாகை

'பாலஸ்தீனம் வாழ்க' என்றும், 'இஸ்ரேலை வீழ்த்து' என்றும் அவர்கள் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த வாரம் மோதல் தொடங்கிய பிறகு ஹைதராபாத்தில் நடந்த முதல் போராட்டம் இதுவாகும். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...

x