டிசி பெற்றுக்கொள்ள வலியுறுத்திய கோலில்பட்டி தனியார் பள்ளிக்கு எதிராக திரண்ட பெற்றோர்!


பெற்றோர்கள் போராட்டம்

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் அங்கு படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வலியுறுத்தியதால், அவர்களின் பெற்றோர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மாற்று ஏற்பாடு செய்ய மனு வழங்கினர்.

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ஸ்ரீராம் நகரில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் இன்று காலை பெற்றோர் கூட்டம் நடப்பதாக அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்றனர்.

அங்கு ஒவ்வொரு பெற்றோரையும் தனித்தனியாக அழைத்து பேசிய நிர்வாகம், அவர்களது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில், அரசின் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவியரின் பெற்றோர், மாற்றுப்பள்ளியிலும் கல்வி உரிமை சட்டத்தில் தங்கள் குழந்தைகள் படிப்பை தொடர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால், கல்வி உரிமை சட்டத்தில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அலுவலகத்துக்கு சென்றனர்.

அங்கு, மெட்ரிக் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகம், தூத்துக்குடியில் செயல்படுகிறது என தெரிவித்ததை தொடர்ந்து, பெற்றோர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு தங்கள் குழந்தைகள் கல்வி உரிமை சட்டத்திலேயே வேறு பள்ளியில் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷமிட்டனர்.

இது தொடர்பாக கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாயிடம் மனு ஒன்றையும் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், “பள்ளி நஷ்டத்தில் இயங்குவதால் பள்ளியை விற்பனை செய்யப் போவதாக சிறிது காலமாகவே தகவல்கள் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை பெற்றோர்கள் கூட்டம் என அழைத்து, ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிய பள்ளி நிர்வாகிகள், எங்கள் குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினர்.

ஆனால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் குழந்தைகளின் நிலை குறித்து கேட்டபோது, அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை. எனவே, மாற்றுப்பள்ளியில் எங்கள் குழந்தைகளை சேர்த்தால், அங்கு கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவர்களை படிக்க மாவட்ட கல்வி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

x