மயிலாடுதுறை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஆக.11) மயிலாடுதுறையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். பிரபாகரன், அருண்பாபு, ராஜமாணிக்கம், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், “திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் குறிப்பிட்டபடி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். 4.10.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்த ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடுக்கான அரசாணை வெளியிட்டு அமல்படுத்த வேண்டும். பணிக்காலத்தில் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.
பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ரூ.12,500 தொகுப்பூதியத்தை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்த வேண்டும். தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அரசு கொள்கை முடிவு எடுத்து 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டமைப்பின் நிர்வாகிகள், பகுதிநேர ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பிரபாகார் பிரகாஷ் வரவேற்றார். அனிஷ்குமார் நன்றி கூறினார்.