ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆசிரியர்களுக்கு மே மாத கோடை கால விடுமுறை வழங்குவதை பள்ளி கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் பிற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று ஈட்டிய விடுப்பினை 30 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பேசிய நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில சட்டச் செயலாளர் எஸ்.கே.கண்ணன், ''மே மாதத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பது வழக்கமான ஒன்று. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கோடை விடுமுறையில் மே மாதம் ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்கும் நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவித்த போது, ஆசிரியர்கள் அரசு விடுமுறை அல்லாத நாட்களில் பள்ளிக்கு வருகை புரிவது அவசியம். அந்த நாட்களில் மாணவர் சேர்க்கை, விடைத்தாள் மதிப்பீடு மற்றும் இதர அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மே 4-ம் தேதி வரை 11-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு பணி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. தொடர்ந்து மே 6-ம் தேதி 12-ம் வகுப்பிற்கும், 14-ம் தேதி 11-ம் வகுப்பிற்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இவற்றுக்காகவும் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிக்காகவும் தொடர்ந்து முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்படுவதால் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காகவும் முதுகலை ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், தற்போது அரசின் நலத்திட்டங்கள் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளதா என்பதை உறுதி செய்ய பெற்றோர்களிடன் ஆன்லைன் மூலம் ஓடிபி பெற்று பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மே மாதம் முழுவதும் விடுமுறை இல்லாமல் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலோடு பணி செய்யக்கூடிய நிலை உருவாகி உள்ளது.
இதேபோன்று அரசின் மீது ஆசிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் மே மாதம் ஆசிரியர்களுடைய கோடை விடுமுறையை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்போது வழங்கப்படும் 17 நாட்கள் ஈட்டிய விடுப்பினை மாற்றி, பிற அரசு துறைப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவது பொல 30 நாட்களாக உயர்த்தி வழங்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்கக் வேண்டும்'' என தெரிவித்தார்.