அரசு அனுமதி கிடைத்ததும் ஆசிரியர் தகுதி தேர்வு: தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல்


சென்னை: அரசு அனுமதி கிடைத்ததும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் இலவச கட்டாயகல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி, ஆண்டுக்கு 2 முறை டெட் தேர்வுநடத்தப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் அவ்வாறு நடத்தப்படுவது இல்லை. கடந்த 2022-ம்ஆண்டுக்கான தகுதி தேர்வு, கடந்த 2023 பிப்ரவரியில்தான் நடத்தப்பட்டது. 2023 மற்றும் 2024-ம் ஆண்டுக்கான தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டு கால அட்டவணைப்படி, 2024-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஏப்ரலில் வெளியிட்டு, ஜூலையில் தேர்வை நடத்தி முடித்திருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் தொடங்கி 10 நாட்கள் ஆகியும்கூட, டெட் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வரவில்லை.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தேர்வு நடத்துவதுதொடர்பாக அரசின் அனுமதி கிடைத்ததும், உடனடியாக தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்படும். தேர்வு முடிவையும் ஒரே மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றவும் டெட் தேர்வுதேர்ச்சி அவசியம். அந்த வகையில்,சிறுபான்மையினர் நல பள்ளிகள்உட்பட தனியார் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி இடங்களில் சேர விரும்பும் ஆசிரியர்களும் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்

x